நிலமகள்.

June 19, 2009

பச்சைப் பட்டு உடுத்தி
பாதிக் கண்மூடி; நாணித்
தலை குனிந்தாய்; நங்கையே
எந்த நிலம் நோக்கி?

சுட்டும் கதிரவனை – தினம்
சுழன்று தனை மறந்தே
வட்டம் போடுவது ஏன்
வருடம் கழிவதும் ஏன்?

எட்டும் தூரத்திலே நிலவு
ஏங்கித் தவிக்கிறதே – நின்னை
வட்டம் அடித்தே தன்
வாழ்வைக் களிக்கிற தேன்?

மாதம் ஒரு முறைக்கே
வானில் மறையும்  நிலவு
வளர்ந்து பெரிதாகும் பின்னர்
வாடித் தேகம் சிறிதாகும்

ஏதுக்குக் காலம் எல்லாம்
ஓர் வழிப் பாதையிலே
தூதுக்கும் யாரும் இன்றி
தொடர்ந்தே காதல் செய்வீர்?

மேதினி முழுவதுமே கோடி
மின்னிடும் வைரங்கள் போல்
வான்வெளி மீதினிலே வெள்ளி
மீன்களின் கண் அடிப்போ?

நாட்டியம் ஆடுகிறாய் நங்கை
நாளும் பொழுது எல்லாம்
காற்றினில் ஆடுகிறாய் மாதே
கடல் அலையிலும் ஆடுகின்றாய்

வெம்மை ஆகுவையோ மேனி
எழில் வேகும் போழ்தினிலே
நின்றன் தேகம் குளிர்ந்திடவோ
மழை மேகம் பொழிவதெல்லாம்?

அண்டப் பெரு வழியே
ஆடும் நாயகியே; உந்தன்
கண்டக் குரல் ஒலிதான்
பிரணவ ஓமென ஆனதுவே

உடலும் எமக்கு தந்து
உயிர் அதிலே பொதிந்து
நாளும் உணவு ஈந்து
வாழும் வழியும் செய்தாய்

ஆக்கி ஆட்டுவித்து; எம்மை
அன்பில் அரவணைத்தே; நித்தம்
தூக்கிச் சுமக்கின்றாய்; நெஞ்சில்
தூங்கவும் வைக்கின்றாய், அம்மா!

நாடகம் முடிந்த பின்னும்
உன்னில் ஒடுங்க வைத்தே
தியாகம் காட்டுகின்றாய்; தாயே
எமக்கு ஞானம் ஊட்டுகின்றாய்!

அறிவுத் திருமகளே! எங்கள்
அன்புப் புவி மகளே !
அருமைத் தலைமகளே! எங்கள்
அன்னை நில மகளே!

***

Advertisements